2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 34.92 சதவீத வாக்குகள் பெற்று, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. அதிலும் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் ஒரு தொகுதியை இழக்க நேரிடும். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளே பெற்றுள்ளது. எனவே, ஆட்சி அமைக்க 11 இடங்கள் தேவைப்படும் நிலையில், அதை விஜய் எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் தனிப் பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.