நாகை மாவட்டம், செருதூரை சேர்ந்த சக்திமயில் (40), அபிமன் (30), பாலசுப்பிரமணியன் (30), பழனிசாமி (29), கன்னியாகுமரி உவரி பகுதியை சேர்ந்த அபி (28) ஆகிய 5 மீனவர்கள், கடந்த 25ம் தேதி ஃபைபர் படகு ஒன்றில் செருதூரில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் நேற்றிரவு 11 மணியளவில் ஆற்காட்டுத்துறைக்கு தென்கிழக்கே 9 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு அதிவேக ஃபைபர் படகில் வந்த 3 பேர், செருதூர் மீனவர்களை தாக்கி கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை தமிழக மீனவர்கள் பிடித்த நிலையில், மற்ற இரண்டு பேர் அவர்கள் வந்த அதிவேக ஃபைபர் படகில் தப்பிச் சென்று விட்டனர். பிடிபட்ட நபரிடம் மீனவர்கள் விசாரணை நடத்தியதில், அவர்கள் மூவரும் கொள்ளையடிக்க வந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும், அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், இலங்கை காங்கேசன்துறை வழலையைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் அயந்தன் (27) என்பதும் தெரிய வந்தது. அயந்தன் தமிழில் பேசியதால், அவரை தமிழக மீனவர்கள் செருதூர் மீன்பிடி இறங்குதளத்திற்கு கொண்டு வந்தனர். கடலில் மீனவர்கள் தாக்கியதில் அயந்தனின் வலது கண் புருவம், இடது பக்க தலை ஆகிய இடங்களில் ரத்தக் காயமும், நெற்றியில் வீக்கமும் ஏற்பட்டதால் சிகிக்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரலாற்றில் முதல்முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையன் பிடிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.