Rock Fort Times
Online News

என் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தது உண்மைதான்…* ஆதாரங்களுடன் விளக்கிய செல்வப்பெருந்தகை!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கடந்த 20ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. வருமான வரித்துறையினர் என சொல்லிக் கொண்டு இந்தி பேசும் நபர்கள், தன் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ராகுல்காந்தி பிரசாரத்திற்கு செல்ல முடியாத வகையில் தன்னை வருமானவரித்துறை அதிகாரிகள் தடுத்ததாகவும் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினார். ஆனால், அவர் சொன்னது போல், செல்வப் பெருந்தகை வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை” என வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும், பொய்யான தகவல்களை பரப்பிய செல்வ பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமானவரித்துறை சார்பில் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று (ஏப்.24)
செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, எனது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது உண்மை தான் என்றும், அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் ஏன் இதுபோன்று அச்சுறுத்த வேண்டும்? சோதனை நடத்தியதால்தான் ராகுல் காந்தியின் பரப்புரைக்கு என்னால் செல்ல முடியவில்லை. வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவியை மட்டும் அணைக்காமல் விட்டதால் இந்த ஆதாரம் கிடைத்தது. சோதனைக்கு வந்த அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்ட திமுக பிரமுகர் படப்பை மனோகரன் வீட்டில், நான் இருந்தபோது சோதனை நடந்தது. சோதனை என்ற பெயரில் மனோகரனின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் சிசிடிவியை அணைத்தனர். வீட்டுக்குள் நுழைந்ததும் ‘பணம் எங்கே?” எனக் கேட்டு அதிகாரிகள் மிரட்டினர். சோதனை செய்யவில்லை என வருமான வரித் துறை அதிகாரிகள் மறுப்பு கூறுகின்றனர். சோதனை நடத்துவது தப்பு கிடையாது. உண்மையை மறைப்பது ஏன்?. வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்