மதுரை சித்திரை திருவிழா என்பது சைவமும், வைணவமும் இணைந்த உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற விழா ஆகும். இதில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மாசி வீதிகளில் தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, வைகை ஆற்றில் அழகர் இறங்கி அருள்பாலிக்கும் வைபவம் ஆகியவை முத்தாய்ப்பு நிகழ்ச்சிகள் ஆகும். இவ்வாறு முத்திரை பதிக்கும் இந்த சித்திரை பெருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 26-ந் தேதி முதல் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று இரவு 7.05 மணி முதல் 7.29 மணிக்குள் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. 27-ந் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 28-ந் தேதி நடக்கிறது. 29-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். 29-ந் தேதியன்று அழகர் மதுரை புறப்படுகிறார். 30-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவையும், மே 1-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறுகின்றன. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாட்களுக்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Comments are closed.