தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு முக்கிய மைல்கல்லாக, புரோ மாட்யூல் (PRO Module-ECINET) என்ற செயலி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இசிஐ நெட் புரோ மாட்யூல் என்பது தேர்தல் பணியில் ஈடுபடும் தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயலியாகும். வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி பொருட்கள் வருகை, மாதிரி வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு தொடக்கம், அந்தந்த நேரப்படி வாக்குப்பதிவு சதவீதம் அப்டேட், வாக்குப்பதிவு நிறைவு போன்ற அப்டேட்களை அதிகாரிகள் கைபேசி செயலி மூலம் நேரடியாக பதிவு செய்ய இந்த புரோ மாட்யூல் பயன்படுத்தப்படுகிறது. இந்த பயிற்சியில் அனைத்து தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், சந்தோஷ் பதாரியா மற்றும் தருண் மிஸ்ரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு புரோ மாட்யூலை பயன்படுத்துவது எப்படி? என்று பயிற்சி அளிக்கப்பட்டது. புரோ மாட்யூல் செயல்பாடுகள் குறித்த இறுதிக்கட்ட சோதனை, நாளை ( ஏப்.15) அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.

Comments are closed.