“புலி” பட வருமான விவகாரம்: உயர் நீதிமன்றத்தை நாடினார் விஜய்!
கடந்த 2015-16 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, “புலி” படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் தெரிவிக்கவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இறுதி விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவு 2019 ஜூன் 30-ம் தேதிக்குள் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆறு ஆண்டுகள் காலதாமதமாக 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அதை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த மேல்முறையீடு முடிந்த பின், ஆறு மாத கால அவகாசத்துக்குள் அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் சரியானது எனவும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, அபராத உத்தரவு உரிய கால அவகாசத்துக்குள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். அப்போது, மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டு, அபராத உத்தரவை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், வருமான வரி அபராதம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீடு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Comments are closed.