திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று(ஏப்.10) திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை, ஐயம்பட்டி, ரெட்டியார் தோப்பு, பெரியார் நகர், காமாட்சி அம்மன் நகர், லூர்து நகர் மற்றும் பத்தாளபேட்டை ஊராட்சிக்குட்பட்ட மேல மங்காவனம், கீழ மங்காவனம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் ₹32.20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல், திருவெறும்பூர் தொகுதியில் மொத்தமாக ₹450 கோடி மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதி மக்களின் கோரிக்கையான சிறிய பாலம் அமைக்கும் பணி தேர்தல் முடிந்த 30 நாட்களுக்குள் தொடங்கப்படும். அதற்கு அடிக்கல் நாட்ட நானே மீண்டும் வருவேன். ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைக்கிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ₹2,000 கோடி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. இத்தகைய துரோகம் இழைக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி எந்த முகத்தோடு மக்களை சந்திக்க வருகிறார்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், சமீபத்திய தேர்தல் கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையும் என கூறுகின்றன. இதைப் பார்த்து தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி நிதானம் இழந்து பேசி வருகிறார் என விமர்சித்தார். தொடர்ந்து, திமுகவின் சாதனைத் திட்டங்களாக மகளிர் உரிமைத் தொகை, இலவச விடியல் பேருந்து பயணம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் ஆகியவற்றை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தைக் காக்கும் உதயசூரியன் சின்னத்திற்கு பெருவாரியான வாக்குகள் அளித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

Comments are closed.