காரைக்குடிக்கு பிரசாரத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசாமல் சென்றதால் வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அருகே தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் சென்ற அவர், அங்கிருந்து பிரசார வாகனம் மூலம் காரைக்குடிக்கு சென்றார். ஆனால் வழிநெடுங்கிலும் தவெக தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்திருந்த நிலையில், பிரசார வாகனத்தின் மேலே நின்றபடி 4 மணிநேரத்துக்கும் மேலாக விஜய் சாலைவலம் மேற்கொண்டார். இதனால் பிரசாரத்துக்காக தேர்தல் ஆணையம் வழங்கிய பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை உள்ள நேரத்திற்குள் அவர் வர முடியவில்லை. பிரசாரத்துக்கு அனுமதி பெறப்பட்ட இடத்துக்கு பிற்பகல் 2.40 மணியளவில் வந்த விஜய், காரைக்குடி வேட்பாளர் பிரபுவை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார். இதனால் பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் காலை முதல் வெயிலில் காத்திருந்த தொண்டர்களும் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

Comments are closed.