தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) காரைக்குடியில் பிரசாரம் செய்ய உள்ளார். இன்று காலை மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அவர், மேலூர் மற்றும் திருப்பத்தூர் வழியாக காலை 11.30 மணியளவில் காரைக்குடி வருகிறார். பின்னர் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வ.உ.சி. சாலை, கழனிவாசல், வாட்டர் டேங்க் வழியாக தேவர் சிலை வரை திறந்த வேனில் நகர்வலமாக சென்று ஆதரவு திரட்டுகிறார். அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் தேவர் சிலை முன்பு திறந்த வேனில் நின்று பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். இந்த பிரசாரத்திற்கு போலீசார் 37 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். முக்கியமாக, மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும், அவர் வந்த அதே பாதையில் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விஜய் வருகையை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் மரங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் மீது ஏறி நிற்பதைத் தடுக்கும் வகையில் அவற்றைச் சுற்றி இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், காரைக்குடி போக்குவரத்து போலீசார் சார்பில் மதுரை, திண்டுக்கல், திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Comments are closed.