தமிழக காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார். தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கை கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தையும் தொடங்கினர். அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பு, சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், அங்கு பிரச்சாரத்தையும் தொடங்கினார். அனுமதி பெறப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்தார். மற்ற இடங்களில் காவல் துறையினர் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பிரச்சாரத்தை ரத்து செய்தார். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே, அக்கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் பங்கேற்ற கூட்டத்தில் மதுபாட்டில் வீசப்பட்டது. இது தொடர்பாகவும் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் பாதுகாப்பு தொடர்பாக டிஜிபிக்கு கடிதம் எழுதிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைவருக்கும் போதிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன், நடந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கையும் கோரினார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கோரி தவெக சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், பல்வேறு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் நேற்று பிறப்பித்தது. அதன்படி, தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதில், காவல் உயர்பயிற்சியக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த ஜெ.லோகநாதனுக்கு பதிலாக அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சரவண சுந்தர் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவிக்கு பதிலாக அருண் தம்புராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்துக்கு பதிலாக விசு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. புதிய டிஜிபி உடனடியாக பதவி ஏற்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், நேற்று இரவே அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தேர்தல் தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்கள் ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.