Rock Fort Times
Online News

வெளிநாடு டூர் – இலவச பைக்  செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியினருக்கு மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் ஸ்வீட் சர்ப்ரைஸ் !

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் மண்ணச்சநல்லூரும் ஒன்று. இங்கு தற்போது திமுக வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ கதிரவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி மண்ணச்சநல்லூர் வாணிபர் திருமண மண்டபத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழர் தேசம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது கட்சியினர் மத்தியில் பேசிய திமுக வேட்பாளர் கதிரவன், தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பவர்களுக்கும் தனக்கு ஆதரவாக வேட்பு மனு அளித்தவர்களுக்கும் ஸ்வீட் சர்ப்ரைஸ்களை அறிவித்தார். அதன்படி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் நானே போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என கட்சி தலைமையை வலியுறுத்தும் விதமாக, எனக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்த 57 பேரையும் நிச்சயம் நான் வெற்றி பெற்ற பிறகு வெளிநாட்டு சுற்றுலா அழைத்து செல்வேன். அது மட்டும் இல்லாமல் நமது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி மேற்கு, முசிறி கிழக்கு, மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றியம், கிழக்கு ஒன்றியம், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள கிளை கழகங்களில் அதிக வாக்குகள் பெற்று தருபவர்களுக்கு மொத்தமாக 130 பைக்குகளை எனது சொந்த செலவில் வாங்கித் தருவேன் என்றார். மேலும்,  கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புதுமுகமான எனக்கு நீங்கள் ஆதரவளித்து சுமார் 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். ஆகவே, எனது பணியை அங்கீகரிக்கும் விதமாக குறைந்தது சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்