தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இன்று (மார்ச் 27) அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். அதன்படி, ஒட்டன்சத்திரத்தில் விடியல் சேகரும், ஈரோடு மேற்கில் யுவராஜாவும், ராணிப்பேட்டையில் கார்த்திகேயனும், கிள்ளியூரில் நிவின் சைமனும், கும்பகோணத்தில் அசோக்குமாரும் போட்டியிடுகின்றனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “பாஜக கூட்டணியில் இருப்பதால், எங்கள் கட்சி வேட்பாளர்கள் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுவார்கள். சின்னம் எது என்பதை விட, வெற்றி பெற எப்படி களப்பணி ஆற்றுகிறோம் என்பதே அரசியலில் முக்கியம். மக்கள் விரும்பும் கட்சியாக பாஜக உள்ளது. தற்போது நாங்கள் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் வென்று, அடுத்த முறை விரும்பும் சின்னத்தில் போட்டியிடவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சென்டிமெண்ட் இருக்கும். எங்களுக்கும் அந்த மாதிரியான சென்டிமெண்ட் உள்ளது. அதனால் தான் வேட்பாளர் அறிவிப்பை 12.12 மணிக்கு வைத்துள்ளோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அமைச்சர்கள் போட்டியிடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். யார் போட்டியிட்டாலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழக அமைச்சர்கள் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. எனவே, அவர்களை நிச்சயம் வெற்றி கொள்வோம். இந்த மக்கள் விரோத திமுகவின் ஆட்சிக்கு நிச்சயம் முடிவுரை எழுதப்படும்” என்று தெரிவித்தார்.

Comments are closed.