தமிழ்நாட்டில் பிளஸ்- 2 தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 8 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதினார்கள். அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்தது. பிற பாடப்பிரிவு மாணவர்களுக்கான கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி வேதியியல். தொடர்பு ஆங்கிலம். இந்திய கலாசாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் இன்று( மார்ச் 26) நடந்தன. இத்துடன் பிளஸ்- 2 அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிந்தது. இந்த ஆண்டு மொழி பாடங்களுக்கு பிறகு இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் முடிந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர். பகல் 1.15 மணிக்கு தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பள்ளி படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்கின்றோம் என்ற நிலையில் தாங்கள் படித்த பள்ளியை நினைவு கூர்ந்தனர். பின்னர் அனைவரும் பிரியா விடை பெற்று சென்றனர். இது ஒருபுறம் இருக்க பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மே 8-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.