தமிழக சட்டமன்றத் தேர்தல்: 8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்… காரணம் இதுதான்!
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 04-05-2026 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வாக்குப்பதிவுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று(மார்ச் 25) வெளியிட்ட அறிவிப்பில், 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் 06.04.2026 (திங்கட்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். ஆனால், 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை). 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 8 நாட்கள் கால அவகாசம் இருந்தும் 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதால் மீதி உள்ள நான்கு நாட்களில் மட்டுமே வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 07-04-2026 தேதி நடக்கிறது.

Comments are closed.