தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜூன்19ம் தேதி கடையை மூடாததால் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் இருவர் மீது காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அச்சமயத்தில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்களை நடத்தின. இந்த சம்பவத்தில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் ஏ1 குற்றவாளியாகக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டு 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், சுமார் 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்து குமரன் இன்று (23.06.2026) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்குகிறார்.

Comments are closed.