Rock Fort Times
Online News

சேலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதி 7 பேர் பலி…!

ஈரோட்டில் இருந்து இன்று(மார்ச் 20) சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து சேலம் மாவட்டம், அரியானூர் பகுதியில் உள்ள உத்தமசோழபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிர் திசையில் பாய்ந்தது. அச்சமயத்தில் அங்கு வந்து கொண்டிருந்த டெம்போ மற்றும் இருசக்கர வாகனம் மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொண்டலாம்பட்டி காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரின் மனதை பதைபதைக்க வைக்கிறது. தற்போதைய நிலவரப்படி இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்