பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலான திருச்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த பிப்ரவரி 26ம் தேதி துவங்கியது. அதன் பின்னர் இம்மாதம் மார்ச் 15ம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து தினமும் சுவாமி, அம்பாளுடன் ரிஷபவாகனம், காமதேனு, சூரியசந்திர பிரபை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதிஉலா கண்டருளும் வைபவம் நடைபெற்றது. 6ம் திருநாளான இன்று( மார்ச் 20) விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான திருத்தேரில் சுவாமியும், அம்பாளும் ஒருதேரிலும், அகிலாண்டேசுவரி தாயார் ஒருதேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாயா என பக்தி கோஷமிட்டவாறு சிவனடியார்கள் முன்செல்ல திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். முதலாவதாக சுவாமியும், அம்பாளும் எழுந்தருளிய தேரை பக்தர்கள் இழுத்துவந்து நிலைக்கு வந்தபின்னர், அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேர் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. தேரானது 4 வீதிகளிலும் வலம் வந்து பின்னர் நிலையை வந்தடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை பயபக்தியோடு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானம் போன்றவை வழங்கப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.