தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் 72 தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் 72 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் ஒரு குழுவினர், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது இருசக்கர வாகனத்தில் வந்த பங்கஜ் என்பவர் கொண்டு வந்த பையில் ரூ.35 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. அதற்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை கைப்பற்றி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். இதேபோல, குமரன் சாலையில் வாகன தணிக்கையின் போது பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது வாகனத்தை சோதனை செய்தனர். ஊடகம் என ஒட்டப்பட்டு இருந்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.6 லட்சம் இருந்தது தெரிய வந்தது. அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.