Rock Fort Times
Online News

பரபரக்கும் அரசியல் களம்: லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் லீமாரோஸ் போட்டி?

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ். இவர் இந்திய ஜனநாயக கட்சியில் (ஐ.ஜே.கே.) இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அங்கு முக்கிய பொறுப்பில் இருந்த அவர் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு அதிமுகவில் மகளிர் அணி மாநில இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அரசியலில் ஆக்டிவாக இருக்கும் அவருக்கு அதிமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி ஒதுக்கப்படும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அவருக்கு திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் லீமா ரோஸ், லால்குடிக்கு வந்து அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த தொகுதியில் ‘சிட்டிங்’ எம்எல்ஏவான சௌந்தர பாண்டியன் ஏற்கனவே கடந்த 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆகிய 4 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். ஐந்தாவது முறையாக அவருக்கு திமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லீமாரோஸ் உடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதேபோல சௌந்தரபாண்டியன் எம்எல்ஏவும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருவருக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசியல் நோக்கர்களால் பேசப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்