திருச்சி ரயில் நிலைய கல்வெட்டில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை மை பூசி அழித்த தி.மு.க. நிர்வாகிகளால் பரபரப்பு..!
திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் தமிழகத்தின் மிக முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி மண்டல ரயில்வே அலுவலக கல்வெட்டு மற்றும் நுழைவு வாயில் பகுதியில் ஹிந்தி எழுத்துக்கள் இடம்பெற்று உள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு ஹிந்தியை தமிழ்நாட்டுக்குள் திணிக்கிறது, இதனை உடனடியாக அகற்றாவிட்டால் மத்திய அரசுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது ஒருபுறம் இருக்க திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, காஜாமலை விஜய் மற்றும் நிர்வாகிகள் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து அங்குள்ள கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்தனர். பின்னர், மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவு வாயிலில் உள்ள இந்திப் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என முழக்கமிட்டனர். இதுகுறித்து மேலதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.