தமிழ்நாட்டை காப்பாற்றுவது மு.க.ஸ்டாலின் என்பதெல்லாம் இனி ‘ஒர்க் அவுட்’ ஆகாது…* தஞ்சை கூட்டத்தில் விஜய் பேச்சு !
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாச்சாமிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று(மார்ச் 4) நடைபெற்றது. இந்த சந்திப்பு கூட்டத்திற்கு 52 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்து இருந்தனர். சுமார் 4,900 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர், இங்கிருந்து சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:-
வேலூர் நிர்வாகிகள் சந்திப்பில் நான் தான் தமிழ்நாடு என்று கூறியிருந்தேன். தமிழ்நாட்டு மக்களின் ஒரே உண்மையான பிரதிநிதியாக நாம்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே. இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். இதில் எப்படி பா.ஜ.க வந்தது எனக் கேள்வி கேட்டிருந்தேன். அதையும், விஜய் பாஜகவுக்காகப் பேசுகிறார் எனத் திரித்துப் பேசினார்கள். நம் சிறுபான்மைச் சகோதரர்களை ஏமாற்றும் வேலை இனி செய்ய முடியாது என்பதைத் தெரிந்து திரித்துப் பேசும் வேலையைச் செய்கிறார்கள். சென்னையில் டெல்லி…டெல்லி… எனப் பேசுவதும், அடித்த கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் அதே டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பதும் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டைக் காப்பது, பிழைக்க வைப்பது திமுக ஸ்டாலின்தான் எனப் பேசுவது ஒர்க் அவுட் ஆகாது. தமிழ்நாட்டு அணி டெல்லி அணி எனப் பேசுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணி தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.
வீட்டுக்கு வீடு விஜய் என்பது இந்த தேர்தலில் 100 சதவீதம் நிரூபிக்கப்படும். அடுத்த ஜென்மத்தில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு விவசாயத்தை பற்றி விவரமாக தெரியாது. மற்றவர்கள் மாதிரி டெல்டாகாரன் என்று உங்கள் காதில் டால்டா ஊற்ற வரவில்லை. ஆனால் விவசாயிகள் பிரச்சினை பற்றி எனக்கு நன்றாக தெரியும். டெல்டா காரன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி கவனித்தாரா? விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது திமுக அரசு. மணல் மாஃபியா கும்பலுக்கு ஆதரவு அளிப்பது உங்கள் திமுக அரசுதானே. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இரட்டை கொலை நடந்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.