திருச்சியில் சங்கத்திற்கென சொந்த கட்டிடம் கட்ட லட்சங்களில் நன்கொடை வழங்க முன்வந்த நிர்வாகிகள்…* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் நெகிழ்ச்சி..!
திருச்சி பழைய கரூர் பைபாஸ் சாலை, அண்ணாமலை நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று ( மார்ச் – 3 )காலை 2026ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் மாநில பொதுச் செயலாளர் வீ. கோவிந்தராஜூலு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சங்கத்தை வலுப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது, சங்கம் வலுப்பெறும் வகையில் மாவட்டத்தில் சங்கம் செயல்படாத பகுதிகளில் சங்கத்தை ஆரம்பிப்பது, வருகிற மே 5ம் தேதி திருவாரூரில் மாநில அளவில் நடைபெறும் வணிகர்களின் விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் திருச்சியில் சங்கத்திற்கென சொந்தமாக கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.இதில் சொந்த கட்டிடம் கட்டுவது குறித்து பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு பேசிய அடுத்த நொடியே சங்க புதிய கட்டிடம் கட்ட திருச்சி மாவட்ட துணைத் தலைவரான சுகந்தி ராஜா ரூ.1 லட்சம் தனது சொந்த பணத்தை வழங்க முன்வருவதாகவும்,அதேபோல பிற நிர்வாகிகளிடமிருந்து மேலும் பணம் வசூலித்து தருவதாகவும் உறுதியளித்தார். அதேபோல மாநில துணைத்தலைவர் ரவி சங்கர் ரூ.10 லட்சம் வழங்க முன்வந்தார். வணிகர் சங்க பேரமைப்பு மாநில இணைச்செயலாளரான டி.ராஜாங்கம் ரூ.2 லட்சம் வழங்குவதாக தெரிவித்தார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திருச்சியின் பிற பகுதிகளை சேர்ந்த சங்க நிர்வாகிகளும் ஆர்வத்துடன் தலைமை நிர்ணயிக்கும் அளவுக்கான நன்கொடைகளை வழங்குவதாக தெரிவித்தனர். இதற்கடுத்து பேசிய மண்டல தலைவர் எம்.தமிழ்ச்செல்வம், மாவட்டத்தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் திருச்சியில் நமது சங்கம் அரசியல் கட்சிகளே பார்த்து மிரளும் அளவிற்கு வலிமையாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் முன்வந்து நிதியளித்தாலே பிரம்மாண்டமான முறையில் சங்கத்திற்கான சொந்த கட்டிடத்தை கட்டிட முடியும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கென திருச்சியில் சொந்த அலுவலகம் கட்ட வேண்டும் என்பது நமது நீண்டநாள் கனவு. அது இப்போதுதான் பொதுச்செயலாளர் மூலம் வெளிவந்துள்ளது. நிச்சயமாக இன்னும் ஓராண்டுக்குள் நமது சொந்த கட்டிட கனவு நினைவாகும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்றனர். இதில், தமிழ்நாடு நகை அடகுபிடிப்போர் நலச்சங்க தலைவர் கந்தன், மாநில துணைத்தலைவர் என்.ரெங்கராஜன், மாநில இணைச்செயலாளர் எம்.தீபக்ராஜா, மண்டலத் தலைவர் எம்.தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாவட்ட துணைத்தலைவர் சுகந்தி ராஜா, மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி கண்ணன், மாநகர துணைச் செயலாளர் வி.பி. ஆறுமுக பெருமாள், திருப்பதி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குனர் திருப்பதி, ஏ.எம்.பி அப்துல் ஹக்கீம், திருமாவளவன், ராயல் குரூப்ஸ் சேட்டு, பால கிருஷ்ணன், ஸ்ரீனிவாசன், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வரும் கிளைச் சங்கங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் மாநகர துணைத் தலைவரான பால கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Comments are closed.