Rock Fort Times
Online News

மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்: ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட என்னால் தி.மு.க.வில் பயணிக்க முடியாது- வெல்லமண்டி நடராஜன் ‘பளிச்’ பேட்டி…!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று( பிப்.27) தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவரது தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் ஏற்கனவே திமுகவில் இணைந்து விட்டார். மற்றொரு ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். இன்னொரு ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தனி கட்சி தொடங்கி உள்ளார். இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து தீவிர களப்பணியாற்றி வந்த அ.தி.மு.க. மீட்புக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும். முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நட ராஜன் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதுதொடர்பாக வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவன் நான். அ.தி.மு.க.வில் நீண்ட காலம் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்று பணியாற்றினேன். 2016 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் முதலில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டனர். மூன்றாவதாக என்னை ஜெயலலிதா அறிவித்து வெற்றி பெறச் செய்தார். அப்போதைய அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் எனக்கு வாய்ப்பளித்தார். ஐந்தாண்டுகள் அமைச்சர் பதவியில் சிறப்பாக பணியாற்றி ஆட்சிக்கும், கட்சிக்கும் நல்ல பெயர் பெற்று தந்தேன். அப்போது முதல் தற்போது வரை அ.தி.மு.க.வின் விசுவாசியாகவே நான் இருந்து வருகிறேன். ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இன்று தன்னை இணைத்து கொண்டு உள்ளார். என்னையும் அவர் அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட எனக்கு தி.மு.க.வுக்கு செல்ல மனம் இடம் தரவில்லை. அதில் என்னால் பயணம் செய்ய முடியாது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்