Rock Fort Times
Online News

‘கல்லாப்பெட்டி கூட்டணி’ எல்லாம் ஒன்று சேர்ந்து வந்தாலும் தில்லா..கெத்தா… தனியா நின்று தேர்தலை சந்திப்பேன்… வேலூரில் விஜய் பரபரப்பு பேச்சு!

வேலூர் மாவட்டம், அகரம்சேரி பகுதியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (பிப்.23) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்திற்கு காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 5 ஆயிரத்துக்கும் குறைவான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. வெயிலில் யாரும் மயங்கி விழாதபடி நிழல் தரும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. குடிநீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் மேடை ஏறியதும் முதலில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். எங்கள் ஓட்டு, எங்கள் உரிமை எங்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என அவர் சொல்ல அதனை திரும்பச் சொல்லி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர் பேசுகையில், மக்களை நேரடியாக சந்திக்க விடாமல் தன்னை தடுக்க சதி நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து என்னுடைய சொந்தங்களாகிய மக்களை சந்திப்பேன். வரப்போகும் சட்டமன்ற தேர்தல் டெல்லிக்கும் – தமிழ்நாட்டிற்குமான தேர்தல் என ஸ்டாலின் உருட்டினார். தமிழ்நாட்டிற்கும், என்டிஏ-விற்குமான தேர்தல் என்கிறார். ஆனால், எதன் அடிப்படையில் அவர் பேசுகிறார் என்பது புரியவில்லை. எந்த தேர்தலை எப்படி கையாள வேண்டுமென மக்களுக்கு தெரியும். உண்மையிலேயே இந்த தேர்தலானது தமிழ்நாட்டு மக்களுக்கும், லஞ்சத்திற்குமான போர், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்குமான போர், தமிழ்நாட்டு மக்களுக்கும் நிர்வாக திறனற்ற அரசுக்குமான போர். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்கள் ஆட்சிக்குமான போர். இன்னும் சுருக்கமாக சொல்லப் போனால் விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் நடைபெறும் போர். தூயசக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் தான் இங்கு போட்டியே. இதில் இன்னொரு காமெடி வேற. அவருடைய ஆட்சியில் தான் தமிழ்நாடு சூப்பர்ஸ்டார் மாநிலமாக உள்ளதாம். ஆம், காமராஜர், அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அப்படி தான் இருந்தது. ஆனால், இன்று ஒன்றுக்கும் உதவாத உல்டா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டேண்டர்ட்-அப் காமெடிக்காரர் வழிநடத்தும் மாநிலமாக உள்ளது. தேர்தல் என்றால் தங்களுக்கான எதிரியை தான் எதிர்ப்பார்கள். ஆனால், இந்த தேர்தலில் அனைவரும் சேர்ந்து என்னை எதிர்க்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கின்றனர். ஏனென்றால் இந்த விஜய் ஊழல், லஞ்சம், மக்களோடு மக்களாக நிற்கிறான் என்ற காண்டில் அவர்கள் என்னை எதிர்க்கிறார்கள். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எதிர்த்து கொள்ளுங்கள். ஆனால், போட்டி திமுக மற்றும் தவெகவிற்கு இடையே தான்.

இந்த தேர்தலில் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ள விஜய் மற்றும் விஜி தான் வேட்பாளர்கள். அப்ப உங்க ஓட்டு உங்க குடும்ப வேட்பாளருக்கு தானே. இதனை உணர்ந்தே நம்முடைய எதிரிகள் ஏராளமான அவதூறுகளை பரப்புகின்றனர். ஒட்டுமொத்த கட்சிகளும் ஒன்று சேர்ந்து இருக்கின்றன. அது கல்லாப்பெட்டி கூட்டணி என்றுதான் சொல்வேன். அத்தனை கட்சிகளும் ஒன்று சேர்ந்து வந்தாலும் இந்த விஜய் கெத்தாக… தில்லாக… தனியாக நிற்பான். தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு நம்பர் ஒன்னாக இருக்கும் என்பது உள்பட சில வாக்குறுதிகளையும் அளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்