Rock Fort Times
Online News

ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது…. திருச்சியில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு !

திருச்சியில் மார்ச் 11ம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரதமர் உரையாற்றுகிறார். இதற்கான இடத்தை பார்வையிடுவதற்காக பாஜக தமிழ் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று( பிப்.21) திருச்சி வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,திமுக அரசு 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இபிஎஸ் தான் அடுத்த முதல்வராக வருவார். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா, கொலை, கொள்ளை அதிகமாகி உள்ளது. திமுகவால் மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சி கொடுக்க முடியவில்லை. திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கதுறை வழக்கு உள்ளது. 200 இடங்களில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஓ.பன்னீர் செல்வம் மீது நாங்கள் மதிப்பு வைத்துள்ளோம் எந்தப் பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிரதமரை சந்திக்க முடியவில்லை, அதனால் அவர் விரக்தியில் இருப்பதால் தான் முதல்வரை சந்தித்தாரா? என்ற கேள்விக்கு அது பழைய கதை. தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய எல்லா நிதிகளையும் மத்திய அரசு ஒதுக்கி கொண்டு தான் உள்ளது. கல்விக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் ஒதுக்கி தான் உள்ளது. ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்