Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே டாஸ்மாக் ‘பார்’ ஊழியர் மரணத்தில் திடீர் திருப்பம்: மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்யப்பட்டது அம்பலம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவரது மனைவி அபிராமி (26). இவர்களுக்கு 9 மற்றும் 6 வயதில் இருமகன்கள் உள்ளனர். பிரபாகர், வையம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 12ம் தேதி குளத்துப்பட்டியில் சாலையோரம் உள்ள ஒரு புளிய மரத்தடியில் இறந்து கிடந்தார். தகவலின்பேரில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சென்று இறந்து போன பிரபாகரன் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது பிரபாகரன் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்ததையடுத்து உறவினர்கள் சந்தேகமடைந்தனர். அவர்களது வலியுறுத்தலின்பேரில் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புத்தாநத்தம் போலீசில் அபிராமி புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அபிராமிக்கும், அவரது உறவினரான பப்லு என்ற பிரபு என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததும், அதனை பிரபாகரன் கண்டித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த 12ம் தேதி வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பிரபாகரனிடம் நைசாக பேசிய பிரபு மற்றும் சரவணன் ஆகியோர் அவரை அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தச் செய்து அதீத போதையில் இருந்த அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்து மரத்தடியில் உடலை போட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் அபிராமி மற்றும் சரவணன் ஆகிய இருவரை புத்தாநத்தம் போலீசார் கைது செய்தனர். திருச்சி, எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த பப்லு என்ற பிரபுவை ( 42) போலீசார் தேடிவந்த நிலையில் அவர் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பிரபு, சரவணன் ஆகிய இருவர் மீதும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. திருமணத்திற்கு மாறான உறவை தடுத்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்