தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) நேரில் சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், ஸ்டாலினுடனான சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து யாருடன் கூட்டணி என்ற முடிவை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்காமல் இருந்த நிலையில், அவரின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இந்தநிலையில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தை அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்திருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மட்டும் பங்கேற்றிருந்தார். இதனிடையே, சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவரது மகனும், அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் உடன் சென்றிருந்தார்., தேமுதிக நேற்று திமுக கூட்டணியில் இணைந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.