Rock Fort Times
Online News

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது யார்?* சட்டப்பேரவையில் திமுக- அதிமுக கடும் வாக்குவாதம்…!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று( பிப்.17) அரசின் இடைக்கால பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண்மை பட்ஜெட் ஒரேநாளில் தாக்கல் செய்யப்பட்டன. இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பேரவையில் இன்று தொடங்கியது. அப்போது தி.மு.க.வின் போராட்டமே மருத்துவ மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு காரணம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டை நாங்கள் தான் கொண்டும் வந்தோம் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விளம்பரம் தேடும் செயலில் மட்டும் தமிழக அரசு ஈடுபடுகிறது. நாங்கள் செய்ததைகூட சொல்லி விளம்பரம் தேடிக்கொண்டது இல்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியை சேர்த்துதான் 11.19 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு யாரும் கேட்காமல் மருத்துவபடிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை அ.தி.மு.க. வழங்கியது. அ.தி.மு.க.வின் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு தி.மு.க. சொந்தம் கொண்டாடுவதா..? 7.5 சதவீத ஒதுக்கீடு குறித்து தி.மு.க. எப்போதாவது பேசியது உண்டா..? ஏதாவது ஆதாரத்தை காட்டுங்கள். உண்மைக்கு புறம்பான தகவல்கள் பேசப்படுகின்றன. நீட் தேர்வு வாக்குறுதியில் நீங்கள் ஏதாவது சாதித்தது உண்டா..? மா.சுப்பிரமணியன் எதை கூறினாலும் தவறாகத்தான் கூறுகிறார். உண்மைக்கு மாறான கருத்தை அமைச்சர் கூறியதால்தான் இவ்வளவு பிரச்சினை. மாணவர்களுக்கு படிக்கும்போது மடிக்கணினி கொடுக்காமல் படித்து முடித்த பின் கொடுப்பது ஏன்..? இவ்வாறு அவர் கூறினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை மிரட்டக்கூடாது. நான் அஞ்சமாட்டேன். அ.தி.மு.க. உறுப்பினர்கள் இருக்கைக்கு செல்லுங்கள். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். அதன் பிறகு சட்டப்பேரவையில் அமைதி நிலவியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்