தமிழக இடைக்கால பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை…-இபிஎஸ்… -பொய்கள் மட்டுமே நிறைந்துள்ளன- அண்ணாமலை..!
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு எப்படி காது குத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறோம். 2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கைகூட நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளைப் போல இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனாமினுக்கி உரையாகத்தான் இருக்கிறது. உருப்படியாக எதுவும் இல்லை. அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும். உற்றுப்பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும். இதற்கு உதாரணம் இந்த இடைக்கால பட்ஜெட். வேளாண் பட்ஜெட் என்று விவசாயிகளை ஏமாற்றுகின்ற பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை:
தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை. தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை விற்பனை செய்து வரும் திமுக அமைச்சர்களை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் என, கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டு கொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர். கடந்த 5 ஆண்டுகளில், திமுக வாங்கிக் குவித்த தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10. 62 லட்சம் கோடியாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை. எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது?. எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்? திமுகவுக்கு வாக்களிக்காத கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில், மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்று, வேண்டுமென்றே தவறான திட்ட அறிக்கையை வழங்கிவிட்டு, தற்போது மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் தமிழக நிதியமைச்சர், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை? . கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடையாறைச் சுத்தம் செய்ய ஆண்டுக்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு செய்ததாகக் கூறிய நிதி எங்கு போனது என்பதும் தெரியவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.