Rock Fort Times
Online News

துறைமுகம் தொகுதியில் ‘சர்வே’ எடுக்கச் சென்ற தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல், 4 பேர் படுகாயம்… * விஜய் கண்டனம்!

சென்னை, துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவின்போது பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், வீடு, வீடாக சென்று கருத்துக்கணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற தவெகவினரை அடையாளம் கண்டு, அவர்களை தேர்தல் அன்று பூத்திற்கு அழைத்து வந்து வாக்களிக்க வைக்க வேண்டியது தவெக நிர்வாகிகளின் பொறுப்பு என்றும் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப். 10) தவெக நிர்வாகிகளான பவானி, திலீப், முகேஷ் பாண்டி, ரகுமான், ஜாபர் ஆகியோர் பகுதிச் செயலாளர் உதயகுமார் தலைமையில் சென்னை துறைமுகம் தொகுதி 60-வது வார்டு பகுதியில் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனை பார்த்த திமுக நிர்வாகிகள், “எப்படி எங்கள் பகுதியில் வந்து கள ஆய்வில் ஈடுபடலாம்” என கேட்டு தவெகவினரை தாக்கியுதாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பிணியான பவானி உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தவெக மாநில நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அவர்கள் கூறுகையில், “தேர்தல் பணிக்காக எங்களுடைய நிர்வாகிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர். இதனையறிந்த அமைச்சர் சேகர் பாபு, சில திமுக ரவுடிகளை ஏவி எங்களுடைய நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதில் காயமடைந்த 6 பேரில் இருவர் ஐசியுவிலும், மற்ற 4 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் தோல்வி பயத்தில் சேகர் பாபு இவ்வாறு செய்துவருகிறார். இந்த தொகுதியில் சேகர் பாபுவை தோற்கடிக்கும் வரை ஓய மாட்டோம்” என்றார்.

விஜய் கண்டனம்

இந்நிலையில், தவெகவினர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த விஜய், இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “சென்னை, பாரிமுனை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்” என கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்