Rock Fort Times
Online News

“திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

விருதுநகரில் தென்மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்,

“திமுக என்றால் பிரம்மாண்டம், இளைஞரணி என்றால் பிரம்மாண்டம், உதயநிதி என்று சொன்னால் அதைவிட பிரம்மாண்டம். நமக்கு மாநாடு என்பது வாரந்தோறும் நடக்கக் கூடியதாக மாறிவிட்டது. இந்த மாதத்தில் மட்டும் இன்னும் 5 மாநாடுகள் நடைபெற உள்ளன. உதயநிதிக்கும், இளைஞரணி நிர்வாகிகளுக்கும் பாராட்டுகளை இந்த விருதுநகரில் விருதாக வழங்குகிறேன். விருதுநகர் என்றாலே காமராஜர் தான் நினைவுக்கு வருவார். காமராஜர் என்றால் மதிய உணவுத் திட்டம் நினைவுக்கு வரும். திராவிட மாடல் ஆட்சி என்றால் காலை உணவுத் திட்டம் தான் நினைவுக்கு வரும். 2026-ல் புதிய சாதனை படைக்க நீங்கள் தயாரா? நமது டார்கெட் என்ன? வெல்வோம் 200.. அதற்காக உழைக்க நான் ரெடி… நீங்கள் ரெடியா? நம்பிக்கையாக இருக்கும் உங்களை பார்க்கும் போது, எனக்குள் உற்சாகம் கூடுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் எனது காலடி தடம் படாத கிராமமே கிடையாது. 22 லட்சம் பேருக்கு பட்டாக்களை கே.கே.எஸ்.எஸ்.ஆர். மூலம் வழங்கப்பட்டு உள்ளது. கூடி இருக்கும் இளைஞர்களை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை வாரிசுகள் இளைஞர்கள். தமிழுக்கு ஆபத்து வந்த போதெல்லாம் போராடி தடுத்து உள்ளோம்.

மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் கத்தி நமது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது. மொழியை அழித்தால், நம்மை அழித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். கல்வி எதற்கு என்று முன்னோர்கள் ஒதுக்கி வைத்திருந்தார்கள். அநீதியை உடைத்து சமூக நீதியை நிலைநிறுத்தினோம். நீட் போன்ற தேர்வுகளை கொண்டு வந்து மீண்டும் பழைய நிலையை கொண்டு வர முயல்கிறார்கள். இதை தடுக்க உண்மையான வலிமையுள்ள ஒரே இயக்கம் திமுக இயக்கம்தான். மாநிலங்களுக்கு அதிகாரங்களே இல்லாத நிலைமைதான் இருந்தது. இதையெல்லாம் போராடி இந்த நிலைகளை மாற்றி, ஓரளவுக்கு அதிகாரங்கள் மாநிலத்துக்கு கிடைக்கும்படி செய்தோம். அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். இதை பாதுகாக்க நீங்கள் தேவை. ஒட்டுமொத்த மாநிலத்தையும் அடகுவைக்க அலைகிறார்கள். 7-வது முறையாக திமுக ஆட்சியை மீண்டும் அமைக்கும். தேர்தலில் மெத்தனமாக இருக்கக்கூடாது. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது. சாதனைகளில் தமிழ்நாட்டிற்கு நிகர் தமிழ்நாடுதான். அனைத்து துறையிலும் நம்பர் 1 மாநிலமாக இருந்தாலும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி என்.டி.ஏ. பழனிசாமியாக மாறிவிட்டார். நானும் ரவுடிதான் என்பதுபோல் நான் தான் கூட்டணிக்கு தலைமை என எடப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டிருக்கிறார். தனக்கு பதவி கொடுத்தவர்களேயே எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கினார். தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை அடையப்போகிறது” என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்