திருச்சி ஜமால் முகமது கல்லூரி 1951ம் ஆண்டு
ஜூலை மாதம் 11ம் நாள் என்.எம்.காஜாமியான் இராவுத்தர் மற்றும் ஹாஜி எம். ஜமால் முகமது சாஹிப் ஆகியோரால் துவக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கி சேவையாற்றி வருகிறது. இவர்களின் கல்விச் சேவையை நினைவுகூரும் விதமாகக் கல்லூரி துவங்கப்பட்ட ஜூலை 11ம் நாள் ஆண்டுதோறும் நிறுவனர் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு இன்று( 11.07.2026) காலை கல்லூரியின் கலையரங்கில் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் இர. ஜாஹிர் ஹுசைன் தலைமைத் தாங்கி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் தலைவர் எம்.ஜே. ஜமால் முகமது பிலால், செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி டாக்டர். அ. கா. காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே.ஜமால் முகமது, உதவிச் செயலர் கே.அப்துஸ் சமது, நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் மதிப்புறு இயக்குநர் கா.ந. அப்துல் காதர் நிஹால், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கல்லூரியின்
முன்னாள் மாணவரும், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான ஏ.எம்.ஷாஜகான் கலந்து கொண்டு கல்லூரியில் தாம் பயின்ற நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். விழாவில் பங்கேற்ற கலைமாமணி, சொல் வேந்தர் சுகி.சிவம் விழாப் பேருரை ஆற்றினார். இவ்விழாவில் சமுதாயத்தில் தலைசிறந்து மக்கள் சேவையாற்றுபவர்களைக் கௌரவிக்கும் வகையில் ‘ஜமாலியன் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தி புரொபஷனல் கூரியர்ஸ் நிர்வாக இயக்குநரும், யூனிட்டி பப்ளிக் பள்ளியின் தலைவருமான எஸ். அஹமது மீரான்க்கு ஜமாலியன் – 2026 என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மேலும், கல்லூரியின் முன்னாள் மாணவர் மருத்துவர் எம்.ஏ. அலீம் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்படும் இஸ்லாமிய அறிவியலாளர் விருதானது, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இணை – துணைவேந்தர்
நூ. தாஜூத்தீன்க்கு வழங்கப்பட்டது. விழாவில்
கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் நரம்பியல் நிபுணர் எம்.ஏ.அலீம்,
மணப்பாறை எம்எம்கே மருத்துவமனை மருத்துவர் முகமது காசிம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவினை முன்னிட்டு மாநிலந்தழுவிய பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் ஏ.ஜே .ஹாஜா முகைதீன் நன்றி கூறினார்.

Comments are closed.