Rock Fort Times
Online News

ஒரு லட்சம் இளைஞர்கள் கூடும் மேடை…- முக்கிய அறிவிப்பு காத்திருக்கிறது என தங்கம் தென்னரசு பேட்டி..!

விருதுநகர் அருகே ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நாளை (பிப். 7) நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுகுறித்து விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் கூறியதாவது: “விருதுநகர் அருகே திமுக தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை தென் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடைபெறும் இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறார். இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் மாநாடு போல் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அமைச்சர்கள் பலரும், கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் பங்கேற்கின்றனர். அரசு ஆணைப்படி அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிடமிருந்தும் முறையாக அனுமதி பெற்று இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் குடிநீர், வாகன வசதி, மின்விளக்கு, உணவு, கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் காலம் என்பதால், இந்த மாநாட்டில் முதல்வரும், துணை முதல்வரும் எத்தகைய தகவல்களை தெரிவிக்க உள்ளனர் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கலாம். தேர்தலை முன்னிட்டு மிக முக்கியமான அரசியல் செய்தி இந்த மாநாட்டில் வெளியாகும்” என்று அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்