பறவைக்காய்ச்சல் எதிரொலி: அசைவ உணவுகளை சாப்பிடுறீங்களா..? பொது சுகாதார துறை விடுத்த முக்கிய அறிவுறுத்தல்..!
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், பொது மக்களுக்கு பொது சுகாதாரத் துறை சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோயாகும். பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவும். பாதிப்பு தீவிரமடைந்து பறவை இறந்துவிடும்போது, அவற்றை பரிசோதனை செய்து நோய் கண்டறியப்படுகிறது. இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. இருப்பினும் அறிகுறிகளை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை மனிதர்களுக்கு இந்நோய் ஏற்பட்டிருப்பதன் சில அறிகுறிகள் ஆகும். இந்நோயானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும், தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது. இது சம்பந்தமாக பொது மக்களுக்கு கீழ்க்கண்ட சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூ போன்ற அறிகுறிகள் (இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம்) உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பறவைகளை கையாள்பவர்கள், குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடங்களில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரிய வேண்டும். ஏதேனும் ப்ளூ/காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அசாதாரண பறவை இறப்புகள் இருந்தால் உடனே கால்நடை மருத்துவதுறைக்கு தெரிவிக்க வேண்டும். கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரியாக சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும். பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்நோய் சம்பந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும், கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளவும்.

Comments are closed.