Rock Fort Times
Online News

ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும்…- வருமான வரித்துறை எச்சரிக்கை..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.20 கோடியாக இருப்பதாகவும், அந்த வரி பாக்கியை செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கியாக ரூ.13 கோடி செலுத்தக் கோரி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வாரிசான தீபக்கும் அந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் ரூ.36 கோடி என்றும், பின்னர் ரூ.13 கோடி செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சரியான தொகையை தெரிவித்தால், அதை செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, வரி பாக்கி தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை சார்பில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி குறித்து பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2026 ஜனவரி 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கான வருமான வரி பாக்கி வட்டியுடன் சேர்த்து ரூ.9 கோடியே 17 லட்சத்து 962 ரூபாயும், செல்வ வரி பாக்கியாக ரூ.11 கோடியே 8 லட்சத்து 8 ஆயிரத்து 730 ரூபாயும் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக், ரூ.6 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரத்து 342 ரூபாயை ஆறு தவணைகளாக செலுத்துவதாக தெரிவித்துள்ளதுடன், அதில் ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஏற்கனவே செலுத்தியுள்ளதாகவும் வருமான வரித்துறை பதில்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரி பாக்கி காரணமாக, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே சில சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டதாகவும், வரி பாக்கியை செலுத்தத் தவறினால், முடக்கம் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பிப்ரவரி 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்