தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் வருகை தர உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அங்கு கட்சி நிர்வாகிகள் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சேலத்தில் வருகிற 13-ந் தேதி விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்த அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ. பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று இரவு மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில், விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் கூறுகையில், “சேலத்தில் ஏற்கனவே விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த பொதுக்கூட்டம் நடைபெறவில்லை. இம்முறை, வருகிற 13-ந் தேதி மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு திறந்தவெளி இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேச உள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறோம்” என்றார். சேலம்–கோவை மெயின் ரோட்டில் இதற்காக 25 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் இன்று சேலம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அனுமதி கோரி மனு அளித்தனர். இதற்கிடையே, சேலம் மாநகர சீலநாயக்கன்பட்டி பகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள மேலும் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ. பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அனுமதி கோரி மனு அளித்தனர். புறநகர் பகுதியில் மகுடஞ்சாவடி மற்றும் மாநகர பகுதியில் சீலநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. எந்த இடத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறதோ, அந்த இடத்தில் பணிகளை தொடங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

Comments are closed.