தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் அன்புமணி தலைமையிலான பாமக, கூட்டணியை உறுதி செய்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் திமுக- அதிமுக- தவெக- நாம் தமிழர் என 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. இதில் ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணியை உறுதி செய்ய காய் நகர்த்தி வருகின்றது. அதில் எதிர்கட்சியாக அதிமுக எப்படியாவது இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என திட்டுமிட்டு திமுகவை வீழ்த்த கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. அந்தவகையில் எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய அதிமுக, அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிகவையும் தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. நாளை மறுதினம்(ஜன.9) கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை அறிவிப்பதாக பிரேமலதா அறிவித்துள்ளார். அதே நேரம் பாமகவில் அன்புமணி தரப்பிலான அணி அதிமுகவுடன் கூட்டணிக்கு ஓகே சொல்லிவிட்டது. அந்தவகையில் இன்று(ஜன.7) காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள பசுமை வழிச்சாலைக்கு சென்ற அன்புமணிக்கு காலை விருந்து அளிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டணி தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.