ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ராப்பத்து 4ம் நாள்: அஜந்தா சௌரிக் கொண்டை அலங்காரத்தில் சேவை சாதிக்கும் நம்பெருமாள்…!
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து டிசம்பர் 20ம் தேதி பகல்பத்து விழா தொடங்கியது. தொடர்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 30ம் தேதி, முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 4ம் நாளான இன்று ( ஜன.2) நம்பெருமாள் அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி மகர கர்ண பத்ரம் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு 1 மணிக்கு பரமபத வாசலை கடந்து திருக்கொட்டகைக்கு சென்று பின்னர் ஆயிரங்கால் மண்டபத்திற்கு சென்றடைந்தார். அங்கு இன்று இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதனைதொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.