ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ இன்று (டிச.20) அறிவித்துள்ளது. ஷுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது, வருகிற பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் சென்னை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் மும்பையிலும், இலங்கையில் கண்டி, கொழும்பு மைதானங்களிலும் நடைபெறவுள்ளன. இந்ததொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, கனடா, நபீமியா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 20 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்ரவரி 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதேசமயம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டியான இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி பிப்ரவரி 15ம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்கிறார். துணைக் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி வீரர்களின் விவரம் வருமாறு:-
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா சிவம் துபே, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

Comments are closed.