பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இது, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. தற்போது வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று(19-12-2025) தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்து வருகின்றனர். இந்த பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனர். அந்தவகையில் கடந்த 10-ந் தேதி தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் (வயது 67) என்பவர் தனது மனைவி செண்பகவள்ளி (65) மற்றும் திருமணம் ஆகி விவாகரத்தான மூத்த மகள் பவானி(42), கண்பார்வையற்ற மற்றொரு மகள் ஜீவா(37) ஆகியோருடன் திருச்சி வந்தார். பின்னர் அவர் யாத்திரி நிவாஸில் அறை எடுத்து குடும்பத்துடன் தங்கினார். கடந்த 4 நாட்களாக அவர்கள் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படாததால் சந்தேமடைந்த விடுதி ஊழியர்கள் இன்று( டிச.19) அந்த அறைக்கு சென்று கதவை தட்டினர். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. மேலும், அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் சீதாராமன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அறைக்குள் நான்கு பேரும் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதையடுத்து 4 உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது, இளைய மகளுக்கு கண்பார்வை தெரியவில்லை
என்பது இது ஒருபுறம் இருக்க குடும்ப வறுமை மறுபுறம் வாட்டி வதைத்தது. உறவினர்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால், சுவாமிநாதன் மன உளைச்சலில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், ஸ்ரீரங்கம் வந்து யாத்திரி நிவாஸில் அறை எடுத்து தங்கி உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை முடிவை தேடிக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் குடும்ப வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும், தாங்கள் இறந்து விட்டால் பிள்ளைகள் சிரமப்படுவார்கள் என்று அவர்களோடு சேர்ந்து இந்த துயர முடிவை தேடிக் கொண்டதாக எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. யாத்திரிநிவாஸ் அறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.