Rock Fort Times
Online News

எஸ்.ஐ.ஆர்.என்கிற ஆயுதத்தை எடுத்து தி.மு.க.வை அழிக்கப் பார்க்கிறார்கள்…* பழனியாண்டி எம்எல்ஏ இல்ல திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி மகன் பி.விஜயபாரதிக்கும், திருச்சியை சேர்ந்த எம்.மனிஷா என்பவருக்கும் திருச்சி சோமரசம்பேட்டை அருகே இன்று(10-11-2025) திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்கள் விஜயபாரதி – மனிஷாவை வாழ்த்தினார்.

மணக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பழனியாண்டி திருமணத்தை கலைஞர் நடத்தி வைத்தார். பழனியாண்டி சகோதரர் திருமணத்தையும் பழனியாண்டி மூத்த மகன் திருமணத்தையும் நான் நடத்தி வைத்தேன். தற்போது அவரின் இளைய மகன் திருமணத்தையும் நான் நடத்தி வைத்துள்ளேன். பழனியாண்டி பேரன், பேத்திகள் திருமணத்தையும் நான் நடத்தி வைப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. திமுகவை கழகம் என்று மட்டுமல்ல இயக்கம் என கூறுவார்கள். இயக்கத்தில் உள்ள நமக்கு ஓய்வே கிடையாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்கி கொண்டு இருப்பது தான் இயக்கம். உடன்பிறப்பே வா நிகழ்வை நடத்தி வருகிறோம். அந்த நிகழ்வில் திமுகவினர் தெரிவிக்கும் மகிழ்ச்சி எனக்கு ஊக்கமாக இருக்கிறது. எதிரிகள் நம்மை வீழ்த்த புது புது யுக்திகளையும், முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். வருமான வரி துறை, சி.பி.ஐ போன்றவற்றை ஆயுதமாக ஏவினார்கள். தற்போது எஸ்.ஐ.ஆர் என்கிற ஆயுதத்தை எடுத்து திமுக வை அழிக்கப்பார்க்கிறார்கள். இது, மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு போதும் அது நடக்காது. திமுகவை அவர்களால் அழிக்க முடியாது. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பா.ஜ.க என்ன கூறினாலும் அதை அதிமுகவினர் ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்களை எதிர்க்க அதிமுகவினருக்கு துணிச்சல் இல்லை. எஸ்.ஐ.ஆரை ஆதரித்த அவர்கள் தற்போது எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக போட்ட வழக்கில் தங்களை இணைத்து கொண்டுள்ளார்கள் என்றால் அவர்கள் கபட நாடகத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். டெல்லியில் இருக்கும் பிக் பாஸ்க்கு பழனிச்சாமி ஆமாம் சாமி போட்டு தான் ஆக வேண்டும். இங்கு பேசிய செல்வக்குமார், முத்தரையர் சமுதாயத்தினர் மீது கடைக்கண் பார்வையை திருப்புங்கள் என்றார். ஆனால் எல்லா பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். அனைவருக்குமான ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் இந்த ஆட்சி நடந்து கொண்டுள்ளது. இந்த ஆட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். திமுகவிற்கு தேர்தல் நிதியாக 51 லட்சம் ரூபாயை பழனியாண்டி வழங்கி உள்ளார். அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இன்னும் அதிகமாக தருவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து செல்லக்கூடியவர் நம்முடைய முதல்வர். இந்த பகுதியில் திமுக முழுமையாக வெற்றி பெற வைத்து முதல்வர் காலடியில் சமர்பிப்போம் என்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், தமிழ்நாடு உலக அளவில் வெற்றி பெற காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் தான். 2026 தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைக்கும் வில்லாக முதல்வர் இருப்பார். துணை முதல்வர் அம்பாக செயல்பட்டு எதிரிகளை ஓட ஓட விரட்டுவார். திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.

முடிவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய பழனியாண்டி எம்எல்ஏ, திமுகவிற்கு 2026 தேர்தல் நிதியாக 51 லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கினார். இந்த திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, கீதாஜீவன், சிவசங்கர், மெய்யநாதன், திமுக துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, அதவத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி.கொடியரசு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதன், தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே.செல்வகுமார், மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்