கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் – வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் தேர்தல் பரப்பரை மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய அவர், அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் போன்ற இடங்களில் பொதுமக்களை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் (செப்.27) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு நேரிடையாக சென்று இறந்தவர்கள் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்ததோடு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று(செப். 29) முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோவை வெளியிட்டு, கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் – வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.