பெட் கேலக்ஸி நிறுவனர் மற்றும் திருச்சிராப்பள்ளி பட்டர்ஃபிளைஸ் ரோட்டரி கிளப்பின் தலைவர் எஸ்.நித்யா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நேற்று (செப்.28) உலக வெறிநாய் தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உலக வெறிநாய் தடுப்பு தின விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தினார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ஜே. கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், டாக்டர். பிரசன்னா பாலாஜி நேஷனல் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் பிரசன்னா பாலாஜி மற்றும் டாக்டர் கணேஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இதில் 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நடைபயணம் ஸ்டூடண்ட்ஸ் சாலையில் தொடங்கி, வெஸ்டி பள்ளியில் நிறைவடைந்தது. வெறிநாய் கடியைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த விழிப்புணர்வு நடை பயணத்தில் நேஷனல் கல்லூரி, காவேரி கல்லூரி, ஜோசப் கல்லூரி, மற்றும் ஜமால் முஹம்மது கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். நடைபயணத்தின் போது, நாய் கடிப்பதை எவ்வாறு தடுப்பது மற்றும் நாய் கடிக்குப் பிறகு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது பற்றிய துண்டுப்பிரசுரத்தை பொதுமக்களிடையே கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பங்கேற்பாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஊமை நாடகமும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் துறையினர் மற்றும் மாநகராட்சியினர் செய்திருந்தனர்.

Comments are closed.