Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே துணிகர சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கட்டிப்போட்டு 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை…!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சி களத்து வீட்டில் வசிப்பவர் அமர்ஜோதி (வயது 53). விவசாயி . இவர் நேற்று( ஆகஸ்ட் 6) இரவு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் உள்ளே அவரது மனைவி பிச்சையம்மாள் (45) மற்றும் மகள், மகன் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகே உள்ள வாழைத் தோட்டம் வழியாக குரங்கு குல்லா, கையுறை அணிந்து கத்தி, வால் மற்றும் உருட்டுக்கட்டையுடன் வந்த மர்ம நபர்கள் 5 பேர், வெளியில் படுத்திருந்த அமர்ஜோதியை தாக்கி கட்டிப்போட்டு விட்டு வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த பிச்சையம்மாள் மற்றும் மகன், மகள் ஆகியோரையும் தோட்டத்திற்கு பயன்படுத்தும் வலையை வைத்து கட்டிப் போட்டதோடு சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் டேப்பை ஒட்டினர். பின்னர், பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும், வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேர் மீதும் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க வைக்கப்பட்டது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும், மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்