வார இறுதி நாட்களில் சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கு மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வருகிற வெள்ளிக்கிழமை 340 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை, 55 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை அன்று 20 பேருந்துகளும் சனிக்கிழமை 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் MobileApp மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.