இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி… * ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!
வாக்காளர் பட்டியலில் இருந்து எஸ்.ஐ.ஆர்.மூலம் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை முறைகேடாக
நீக்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று(16-10-2026) திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்கள் தபால் நிலையத்திற்குள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேசிய கொடியுடன் வந்த வாலிபர் சங்கத்தினர் போலீசாரின் தடுப்புகளை மீறி தபால் நிலையத்திற்குள் செல்ல முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து தபால் நிலையத்திற்குள் செல்ல முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இப்போராட்டத்தால் தலைமை தபால் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.