Rock Fort Times
Online News

திருச்சியில் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்…* பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு அரசின் வணிகர் நல வாரியத்தில் கட்டணம் இன்றி உறுப்பினர் சேர்க்கை முகாம் திருச்சி பழைய பால்பண்ணை வெங்காய மண்டியில் இன்று(ஜூலை 17) நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் வெங்காயமண்டி தங்கராஜ் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் செந்தில் பாலு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.இந்த முகாமில் வணிகவரித்துறை இணை ஆணையர் ஜெயராமன், துணை ஆணையர் மணியன், வணிகவரி அலுவலர் வளனரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு வியாபாரிகளிடம் நலவாரியம் மற்றும் நல வாரிய பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினர் . இந்த முகாமில் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு செலுத்த வேண்டிய கட்டண தொகை ரூ.500க்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டது. இந்த அரிய வாய்ப்பு நவம்பர் மாதம் வரை மட்டுமே உண்டு. வணிகர் நலவாரியத்தில் உறுப்பினரானால் பணியின் போது உறுப்பினர் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆண்டுதோறும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஐந்தாயிரம் முதல் 10 ஆயிரம் வரை கல்வி நிதி வழங்கப்படும். கடைக்கு தீ அல்லது பேரிடர் இழப்பு ஏற்பட்டால் ஐந்தாயிரம் வரை வழங்கப்படும். இதே போல் பல்வேறு சலுகைகள் உள்ளன. இந்த வாய்ப்பை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த முகாமில் தமிழ்நாடு அடகு நகை பிடிப்போர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அன்பழகன், மாநில பொருளாளர் அம்பாள் ஸ்ரீராமு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்