Rock Fort Times
Online News

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்- * தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜர் குறித்து திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் சிவா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா. பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர். உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்ததற்கரிய பெரும்பேறு!
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூகநீதியையும், மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்! இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்