Rock Fort Times
Online News

திருச்சி, வயலூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி- * மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

திருச்சியில் உள்ள மிக முக்கியமான சாலைகளில் ஒன்று வயலூர் சாலை. இங்குதான் பிரபலமான முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகரை தரிசித்து செல்கின்றனர். முகூர்த்த நாட்களில் திருமணம் மற்றும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் வயலூர் மட்டுமின்றி உய்யக்கொண்டான் திருமலை, அல்லித்துறை, சோமரசம்பேட்டை, சீனிவாச நகர், வாசன் சிட்டி, வாசன் வேலி உட்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் பள்ளிகளும் அமைந்துள்ளன. இங்குள்ள மக்கள் பணிகள் மற்றும் வேலை நிமித்தமாக தங்களது இரு சக்கர வாகனங்களில் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். சோமரசம்பேட்டை, உய்யக்கொண்டான் திருமலை, அல்லித்துறை, அதவத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். அவர்களும் தங்களது இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். மேற்கண்ட பகுதிகளில் தெரு நாய்கள் ஏராளமாக சுற்றித் திரிகின்றன. பொதுமக்கள் வெளியிடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அவர்களை துரத்தி சென்று கடிக்க பாய்கின்றன. இன்றைய தினம்(ஜூன் 17) கட்டிட பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன்- மனைவியை நாய்கள் துரத்தி சென்றதில் அவர்கள் தடுமாறி கீழே விழுந்து ரத்த காயம் அடைந்தனர். அப்போது கனரக வாகனங்கள் எதுவும் வராததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதேபோல சாலைகளில், தெருக்களில் செல்வோரை நாய்கள் விரட்டி செல்வதால் பலர் கீழே விழுந்து உள்ளனர். வயலூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களையும் நாய்கள் விட்டு வைப்பதில்லை. புத்தூர் நான்கு ரோட்டில் தொடங்கி வயலூர் வரை நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தினந்தோறும் ஒரு வித அச்ச உணர்வோடுதான்
வெளியிடங்களுக்கு சென்று வரவேண்டிய நிலை உள்ளது. ஆகவே, மேற்கண்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையர் சரவணன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்