தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற சில எழுத்தாளர்கள் ஆசிரியர்களாகவும், அரசு ஊழியர்களாகவும் பணியாற்றியவர்கள். அதேபோல் மாணவர்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் புத்தகம் எழுதுவது மற்றும் வெளியிடுவது தொடர்பான திருத்த அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன்படி ஒவ்வொரு அரசு ஊழியரும் எந்தவொரு புத்தகத்தையும் வெளியிடுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும்.இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர், வெளியீட்டாளரிடம் இருந்து ஊதியம் பெறும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.இந்த விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திருத்தத்தின்படி, அரசு ஊழியர்கள் எழுதும் புத்தகத்தில் அரசுக்கு எதிரான எந்த விமர்சனமும் இல்லை என்றும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் ஆட்சேபனைக்குரிய உரை இல்லை என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.வெளியீட்டாளரிடம் இருந்து ஊதியம் அல்லது ராயல்டி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed.